தாய்மையே தலைசிறந்தது…

Posted by Admin on Sep 1, 2017

    வாழும் மானுடத்தின் வணக்கத்துக்குரியவர் தாயார். தன் வயிற்றயே வீடாக்கி வளருகின்ற உயிருக்குகாக தன் சுவை உணர்வுகளையே கட்டுப்படுத்திக் கொள்வது தாய்மை. அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்தவுடன் அதன் நலத்திற்காகத் தன் சுக துக்கங்களை மறந்து தன்னலங்களையே துறந்துவிடுவது தாய்மை.

12

    தன் தாயின் தொண்டினை மகரிஷியே பின்னாளில் நினைத்து தாய்மையைப் போற்றுகின்றார். தாய்மை தியாக களஞ்சியம் அல்லவா?

  குழந்தை வேதாத்திரியின் மீது தாயின் பாசம் அளவிட முடியாதது. அவரது தாய் வேதாத்திரிக்குக் காட்டிய அன்பையும் பாசத்தையும் வேறு எந்த உவமையாலும் கூற இயலாது.

  மூன்றுவயதில் ஒருநாள் குழந்தையைத் தனது வயிற்றின் மீது கிடத்திக் கொண்டு மல்லாந்து படுத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் அன்னை சின்னம்மாள்.

  குழந்தையை கீழே கிடத்திவிட்டுத் தூங்கினால் எறும்பு கடிக்குமோ என்று தன் வயிற்றின் மீது குழந்தையைப் போட்டுக் கொண்டே தூங்கினார்கள்.தாய்மை என்பது இறைமைதானே!

   வயிற்றின் மீது இருந்த குழந்தை வேதாத்திரி முன்னோக்கி விரைவாகத் தாயின் வாயை தலையால் மோதி விட்டது. தாயின் வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

   ஆனால், தன் வாயிலிருந்து இரத்தம் கொட்டுவதை கையால் பொத்திக் கொண்டு, குழந்தையின் தலையில் அடி பட்டிருக்குமோ? எவ்வளவு வலி குழந்தைக்கு இருக்குமோ என்று கதறி அழுதார்கள் அன்னையார்.

   அன்னையின் அன்பு கடலைவிட ஆழமானது. நிலத்தைவிட பரந்தது. விண்ணைவிட உயர்ந்தது. அன்பு + பாசம் + தியாகம் + அறம் ஆகிய பண்புகளின் கூட்டுத்தொகை அன்னை சின்னம்மாள்.

   குழந்தையை ஐந்து வயதுவரை சோறு ஊட்டும்போது கதைகள் சொல்லி வளத்தார்கள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு சுற்றிச்சுற்றி வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டுவார்கள். கோழி, காக்கை, பல்லி இவற்றை நேரில் காட்டுவார்கள். யானை, புலி, கரடி இவற்றையெல்லாம் கதைகள் மூலம் வரவழைத்துக் காட்டினார்கள்.

    அடிக்கடி அன்னை சொன்ன “கஜேந்திர மோட்சம்”  கதையால் குழந்தையின் மனது ஈர்ப்படைந்தது. அதனால் அதிகச் சோறும் சாப்பிட்டது. மற்ற கதைகளை விட இக்கதை சொன்னால் குழந்தை மயங்கிவிடும்.

    ஒரு பெரிய குளம், அதிலே வாயைத் திறந்துகொண்டு நிற்கும் முதலை, தண்ணீர் குடிக்க வரும் பெரிய யானை, யானையின் காலை முதலைக் கவ்விக்கொள்வது, யானை ‘ஆதிமூலமே’ என்று அலறுவது, ஆகாயத்தில் சங்கு சக்கர தாரியாக மகாவிஷ்ணு நின்றுகொண்டு கையைக்காட்டுவது. இந்த கற்பனைக்காட்சிகள் குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. களிமண்ணில் ஒட்டியது போல் இதயத்தில் பதிந்தன.

    இந்த கதையைக்குறித்து தாயிடம் குழந்தை பல கேள்விகள் கேட்டது. பிஞ்சு வயதை மிஞ்சிய ஞானமிக்க விந்தைக் குழந்தையின் கேள்வியில் மயங்கினார் அன்னை.

    குழந்தை வேதாத்திருக்கு யானை மீது  அதிக இரக்கம், பாசம். பாவம், யானை ஏனம்மா முதலையிருக்கும் குளத்திற்கு வந்தது? அந்த  முதலையை யாரும் அடித்துத் துரத்தவில்லையா?யானைக்கு வேறு குளம் கிடைக்கவில்லையா?

    வினாக்களுக்கு விடையளித்துக்கொண்டே ஒரு வாய்ச்சோற்றை உள்ளே தள்ளுவர்கள் அன்னை ஒரு அளவு வைத்திருந்தார். அந்த அளவு குழந்தை சாப்பிட்டு விட்டால், கதைகள் காட்சிகள் எல்லாம் முடிந்துவிடும்.

ஒரு நல்ல தாய் 100 ஆசிரியர்களுக்கு சமம் என்று மேலை நாட்டு அறிஞர் ஹெல்பர்ட் கூறியுள்ளார். வேதாத்திரியை உருவாக்கிய பெருமை சின்னம்மாவிற்கு சேரும். சின்னம்மா தியாகத்தின் திருவுருவம். குழந்தையின் எதிர்காலம் தாயின் செயலில்தானே அடங்கியுள்ளது? தாயை வாழும் தெய்வமாகப் பேற்றினார்கள் மகரிஷி. இதைத்தான் நம் முன்னோர்கள் “மாத்ரு தேவோ பவ”என்று போதித்தார்கள்.