தவமாய் தவமிருந்து…

Posted by Admin on Nov 7, 2016
maharishi

மானுட வாழ்க்கை குழந்தையினால் முழுமை பெறுகிறது.

மங்கல மனைமாட்சியில் நல்லணி,நன் மக்களைப் பெறும் பேறாகும்.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு”

குழந்தை உற்பத்தியானது பெற்றோர்களின் உடல்,உயிர்,அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறு அமையும்.எனவே, நன்மக்களைப் பெறத் தவமிருப்பது அக்கால வழக்கம்.இயற்கை தகவமைப்பில் அவ்வப்போது சரிசெய்யப்படவேண்டிய விநாடிகள் வருகிற போது, இயற்கைமகான்களைப் பிரசவிக்க பொருத்தமான கருவறையைத் தேடிக்கொண்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் அறிவியலையும், ஆன்மீகத்தையும்,விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும், தத்துவக் கருத்துக்களையும் பாமரர்களிடமும் சென்றடைய தகுதியான ஒரு மகானைக்கருக் கொண்ட இயற்கை அதற்குரிய கருவறையைத் தேடிக்கொண்டிருந்தது. பிறவிச் சக்கரத்திற்கு விடுதலை அளித்துக் கூடு – வான்போய் சேருமிடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் பரம ஏழையான நெசவாளத் தம்பதியர்கள் வரதப்பன், சின்னம்மாள் வாழ்ந்து வந்தனர். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற சமுதாயத்தில் வாழ்ந்த தம்பதியருக்கு ஏழு குழந்தைகள், ஆறு பெண்களும், ஒரு ஆணும் பிறந்தது. அதில் ஒரு ஆணும், இரண்டு பெண்களும் இறந்து விடுகிறார்கள். ஒரு ஆண்மகன் வேண்டுமென்று இத்தம்பதிகள் பல நோன்புகளை நோற்றார்கள். தரையை மொழுகி அதன் மேல் சாப்பாடு போட்டு குனிந்து வாயினால் சாப்பிடும் ஒரு நோன்பை சின்னம்மாள் செய்தார்கள். பக்தியில் ஆழ்ந்து பரமனிடம் வேண்டினார்கள். அரசமரச் செடியையும், வேப்பமரச்செடியையும் தேடிக்கொண்டு வந்து கூடுவாஞ்சேரி குளக்கரையில் மேற்குப் பக்கத்தில் வைத்து வளர்த்தார்கள். அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வைத்தார்கள். பிள்ளை வேண்டி தவமாய் தவமிருந்தனர். இயற்கைப் பேராற்றலின்கருணைக் கூறுகளை ஏந்தியபடி மகானைப் பிரசவிக்க காத்திருந்தனர்.

“கோயில்குளம் சென்று பல நோன்பு நோற்றுக்குலத்திற்கோர் மகன் வேண்டித் தவம்புரிந்த”

உலக மானுட வாழ்வில் வளத்தைச் செழுமைப்படுத்த தேடிக் கொண்டிருந்த கருவறையை இயற்கை கண்டுணர்ந்தது. சின்னம்மாள் கருவறையின் வேதத்தின் வித்தகரை விதைத்தது, பூமடியில் விழுந்தது புனித மகரந்தம்.

– வேதாத்திரி மகரிஷி.