உடலோடு உரையாடு…

Posted by Admin on Oct 23, 2017

உடலோடு உரையாடு…

எங்கோ ஒரு மூலையில் காலை இடித்துக் கொண்டு வலிதாங்க முடியாமல் போகும் போதுதான் நம் காலை,பாதத்தை பார்க்கிறோம்.

தினசரி வேலைகள் தடைபடும் அளவிற்கு கை வலிக்கும் போதுதான் கைகளை கவனித்து அதை குறித்து ஆராய்கிரோம். நாம் அடியெடுத்து நடை பழக ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் கால்களும் பாதங்களும் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறது என நாம் சிந்தித்திருக்கிறோமா?

இந்த கைகள் இல்லாமலோ இல்லை குறைபாடோடு இருந்திருந்தாலோ நாம் எப்படி இருந்திருப்போம் என யோசித்ததுண்டா? நம் வாழ்விற்கு அடிப்படையான ஆதாரமான உடலைக்குறித்த அறிவை நம் வாழ்க்கையின் ஓட்டத்தில் தொலைத்துக் கொண்டு ஓடுகிறோம்.

உடலை சிதைக்கும் உணவு முறைகள், பழக்கவழக்கங்களில் நம்மை அறியாமலேயே சிறைபட்டுக்கொண்டோம். உணவுபோல் மாறிப் போன மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையில் நம் வாழ்நாளின் எண்ணிக்கையை சுருக்கிக் கொண்டோம்.

இடிந்து கொண்டிருக்கும் சுவற்றில் சித்திரம் வரைய முயன்று கொண்டிருக்கிறோம். இப்படி வலிகளாய் நோய்களாய் நம்மை நம் உறுப்புகள் தட்டி எழுப்பா விட்டால் நமக்கு அதைப்பற்றிய விழிப்பே வருவதில்லை.

உணவாய் நமக்குள் போவதெல்லாம் உடலாய் மாறும் விந்தையை அறிய மறந்தோம். ஒரு நொடிப் பொழுது கூட இடைவிடாமல் தன் உழைப்பால் நம்மை உயிர்ப்புடன் வழி நடத்தும் உள்ளுறுப்புகளைப் பற்றியும் நம்மை அறியும் உள்முக பயணத்திற்கு ஆதாரமான உடலைக் குறித்தும் கொஞ்சம் யோசிப்போம்.

நம் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் ஒருசில நிமிடங்கள் ஒதுக்கி தினமும் நேசிப்போம். உடல்நலம் காக்கும் உடற்பயிற்சிகளை தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி எளிமையின் எல்லை தொட்டு 7 வயது முதல் 70 வயது வரை அனைவரும் மிக மிக சுலபமாக செய்யும் வகையில் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய எளிய முறை உடற்பயிற்சி நமக்கான ஒரு உன்னதமான வரப்பிரசாதம்.

வாருங்கள் உடலோடு உரையாடி ஆரோக்கியமான அமைதியை சுவாசிப்போம். ஒவ்வொரு முழுமையும் ஒரு ஆரம்ப புள்ளியில்தான் துவங்குகிறது.

அமைதியை ஆரோக்கியப் புள்ளியில் ஆரம்பிப்போம் வாருங்கள்!
வாழ்க வளமுடன்.