அறிவியல் வளர்கிறது! அறவியல் தேய்கிறது!!!

Posted by Admin on Sep 4, 2017

தலைப்பு மகிழ்ச்சியினையும், அதே நேரத்தில் ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கின்றது.  ”அல்லவை தேய அறம் பெருகும்” என்றார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  அவதரித்த செந்நாப்புலவர் திருவள்ளுவர்.  அன்றிருந்த மனிதகுல நிலையைக் கண்டு, அறம் வளர வேண்டும் மனிதகுலத்தில் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.  அதற்கு  அல்லவை(நல்லவை அல்லாதவைகள்) மறைய வேண்டும் என்கின்ற தீர்வையும் கூறுகிறார்.  எவ்வாறு அல்லவை  மறைய முடியும்? சிந்திப்போம்.

எல்லா ஆசைகளிலும் முதன்மை வகிப்பது எது?

உயிரினால்தான் மனித வாழ்வு நடந்து கொண்டிருக்கின்றது.  உயிரில்லையேல் வாழ்வு ஏது?.  உயிரால்தான் வாழ்வு என்றாலும்,  உயிரினும் மேலான ஒழுக்கம் இல்லாது போய்விட்டது மனித வாழ்வில். உயிரைவிட மேலானது ஒழுக்கம்  என்கிறார் ஒழுக்கம் உடைமை என்கின்ற அதிகாரத்தில்.தெய்வப்புலவர் திருவள்ளுவர். தெய்வப்புலவர் கூறுவது சரிதானே?! மனிதனின் எல்லா ஆசைகளிலும்  முதன்மை வகிப்பதும், பிரதானமானதும் உயிர் மீதுள்ள ஆசைதான். அத்தகைய விரும்பத்தகுந்த, நேசிக்கத்தகுந்த தன்உயிரை விட மேலானதான ஒழுக்கத்தின் மீது மனிதன் விருப்பம்  கொள்வதில்லை. ஒழுக்கம் என்பது என்ன? யாருக்கும் சிறு துளி கூட துன்பம் தராத நல்லவைகள் எல்லாமே ஒழுக்கம் தான்.  ஆனால் அல்லவைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றனவே!.

 

ஆறுதலையும் நம்பிக்கையும் அளிக்கக்கூடிய வரம் மனவளக்கலை:   

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர், சமுதாயத்தில் அறம் பெருகாத நிலையினைக்  கண்டு மிகவும் கவலையுற்றிருக்கிறார்.   அல்லவை தேய்ந்தால் அறம் பெருகும் என  திருவள்ளுவர் கூறியிருந்தும்,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், இன்றாவது சமுதாயத்தில்  அல்லவை தேய்ந்து அறம் பெருகி உள்ளதா?  இல்லை என்றுதான் அறிஞர் திருவள்ளுவருடன் இணைந்து மிகுந்த வருத்தத்துடன் பதிலளிக்க வேண்டியுள்ளது நாமும். இதனைத்தான் திருவள்ளுவர் வழி வந்த வேதாத்திரி மகரிஷி அவர்களும் ‘உள்ளதை உணர்தல்*, நல்லவை செய்தல், அல்லவை விடுதல்’ என்று கூறியுள்ளார். ‘அல்லவை தேய்ந்து அறம் பெருகுவதற்கு’ அறிவுரை வழங்கிய பிறகு இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாகவா தேவையிருக்கும் பேரறிவாகிய இயற்கைக்கு(இறைக்கு)?

அல்லவே!  ஆறுதலையும் நம்பிக்கையும் அளிக்கக் கூடியதாக மனவளக்கலை என்கின்ற வரத்தை  இறை சமுதாயத்திற்கு கருணையோடு நல்கியுள்ளது,

மனவளக்கலையில் அறிவியலும் அறவியலும்:   

உலக சமுதாய நலனில் அக்கறை கொண்டதால், தன் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்து, அல்லவை தேய்வதற்கான வழிகளை ஆராய்ந்து தீர்வையும் அளித்துள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்  வேதாத்திரி மகரிஷி அவர்களின் நீண்டநாள் ஆராய்ச்சியின்  பயனாக   மலர்ந்ததுதான் மனவளக்கலை எனும் அறவியல்.  மனவளக்கலை அறிவியலைக் கொண்ட அறவியல்.  மனவளக்கலையில் அறிவைப் பற்றிய அறிவியலும்(அறிவு+இயல்=அறிவியல்) உள்ளது.  அறவியலும்(அறம்+இயல்=அறவியல்) உள்ளது.

இரண்டு கண்கள் அவசியமாக இருப்பதுபோன்று மனிதகுலத்திற்கு அறிவியலும் அவசியம்,  அறவியலும் அவசியம்.

அறிவுக்கண் திறந்தால்தான்  அறவியல் வளரமுடியும்:

அறவியல் வளர்ந்தால்தான் அறிவு தன்னுடைய ஏழ்மை நிலையான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றைப் போக்கிக் கொள்ள முடியும்.  அப்போதுதான்

விஞ்ஞானத்தை நேர்வழியில் பயன்படுத்திக் கொள்ளும் நெறிமுறைகள் இணைந்த வாழ்வும் மலர முடியும்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் அறவாழ்வின் நாட்டத்தின்பால் அமையும்.

பூர்வீகச் சொத்தான, நிதிகளிலே சிறந்ததான நன்னிதியாகிய அமைதியினை  பெற்று உய்ய முடியும் சமுதாயம்.

அப்போதுதான்  விஞ்ஞானத்தினால்  மனிதகுலத்தில் நெறிமுறைகள் கூடிய வாழ்கை மலர்வதற்கு வித்திட முடியும். அதற்கு அறிவியல் வளர்வதுபோன்று அறவியலும் வளரவேண்டும்.   திருவள்ளுவர் வாழ்ந்த காலம். விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலம்.    திருக்குறளை ஓலைச்சுவடிகளில் அச்சாணி கொண்டுதான் எழுதி இருக்கிறார் திருவள்ளுவர்.  அச்சுத்துறை வளர்ச்சி பெறாத காலம் அது.  இப்போது அச்சுத்துறை எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதனை யாவரும் அறிவர். இவ்வாறாக விஞ்ஞானம் ஒவ்வொரு துறையிலேயும் வளர்ந்து வருகின்றது.

விஞ்ஞானம் என்பது என்ன?

அறிவின் முதல் அறிவியாலளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

அறிவின் சிறப்பு விஞ்ஞானம்அறிவின் முழுமைப்பேறு மெய்ஞ்ஞானம்என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். கி.பி. 1911 வரை,   இயல்(Science) இல்லாமல் இருந்த அறிவிற்கு(Consciousness without Science till 1911)   இயல் உருவாக்கியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எனவே அவரை முதல் அறிவின் அறிவியலாளர் என ஆராதித்து ஆனந்தம் கொள்கின்றோம்.  

அறிவு இயற்கையின் இரகசியங்களைக் கண்டுபிடிக்கின்றது என்றால் அது ஆறாம் அறிவின் சிறப்பு.  விஞ்ஞானம்(Science) என்பது என்ன?  இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அமைக்கும் கலை விஞ்ஞானம்(விண்+ஞானம்=விஞ்ஞானம்).  புலன்களின் ஆற்றலை அதிகரிப்பது விஞ்ஞானம். உதாரணத்திற்கு வெறும் கண்களின்(naked eyes) பார்க்கும் திறனை அதிகரிக்க (Telescope) தொலைநோக்கியும், நுண்ணோக்கியும்(Microscope) கண்டுபிடித்தது விஞ்ஞானம்.  இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றும் திறனை ஆறாம் அறிவின் சிறப்பு என்றுதானே கூறமுடியும்!  ஆனால் ‘அறிவின் சிறப்பு விஞ்ஞானம்’ என்று மட்டும் கூறிவிட்டு அத்துடன் சென்றுவிடவில்லை அறிவின் அறிவியாலாளரானா வேதாத்திரி மகரிஷி.   அறிவிற்கென்று தனியாக இயல் உருவாக்கிய மாமேதை என்பதால்  மேலும், அறிவின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார். ‘எண்ணமே இயற்கையின் சிகரம்.’ என அறிவித்தவராயிற்றே அவர். எண்ணம் வேறு அறிவு வேறா என்ன?  இரண்டுமே ஒன்றுதான்.  அறிவுதான் எண்ணுகின்றது(Consciousness thinks).

அதாவது, ‘அறிவின் முழுமைப்பேறு மெய்ஞ்ஞானம்’ என்று கூறி அறிவின் சிகரத்தைக் காட்டுகிறார்.   அறிவின் முழுமைப்பேற்றிற்கான இயல் இதுவரை(1911 முன்னர்) உருவாக்கப்படவில்லை.  அறிவின் முழுமைப்பேற்றினைத் தரும்  இயல்தான் அறவியல். அதனை ஒழுக்கவியல் என்றும் கூறலாம். ஏனெனில் அறத்தில்    முதன்மை வகிப்பது ஒழுக்கம். ஒழுக்கம்தான் அறம். ஒழுங்காற்றலாக திகழ்கின்ற அறிவு மனிதவாழ்க்கையில் ஒழுக்கமாக செயல்படவைக்கும் கலைதான், ஒழுக்கவியல் எனப்படுகின்றது. அறவியல் உருவாக்கிய கலைதான்  மனவளக்கலை. அறவியல், ஒழுக்கவியல், மனவளக்கலை எல்லாம் ஒன்றுதான்.

விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள வேறுபாடு?

ஏன் விலங்கினத்தோடு மனித இனத்தை இணைத்து சிந்திக்க வேண்டியுள்ளது?  விலங்கினத்திலிருந்து மனித இனம் வந்துள்ளது என்பதால் மனித இனத்தின் சிறப்பை உணர்வதற்கு விலங்கினத்தோடு இணைத்து பேச வேண்டியுள்ளது. விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்த மனிதகுலத்தை வேறுபடுத்துவதே அறவியல் வளர்ச்சிதான். அறவியல் அவசியம் என்பதால்தான்,

 ”விஞ்ஞானத்தை நேர்வழியில் பயனாய்க் கொள்ளும்

      நெறிமுறைகள் இணைந்த வாழ்வு காண்போம்என்கின்ற உலக நல நாட்டத்தையும்,

      “உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்

      ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்  என்கின்ற உலக நல வேட்பினையும்

  “நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்என்கின்ற உலக நல வாழ்த்தினையும்

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்துள்ள வேதாத்திரிய-மெய்ஞானம் உருவாக்கியுள்ளது.

உலகில் அமைதி தழைத்தோங்குவது மக்கள்  அறவாழ்வு வாழ்வதன் மூலமாகவும், விஞ்ஞானத்தை நேர்வழியில் பயன்படுத்துவதன் வழியாகவும் தான் சாத்தியமாகும்.

தனது அறிவின் கூர்மை மற்றும் கைத்திறனாலும் புலன் கருவிகளின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளக்கூடிய .இயந்திர விஞ்ஞான சாதனங்களை ஏற்படுத்தி, பயன்படுத்தி ஒருவரே பலரைக் காத்து உதவி வாழத்தக்க பெரும் வளம் மிகுந்தவன் மனிதன்.   இத்தகைய உயிரின் உச்சத்தில் உள்ள மனிதன் தான் செய்யும் வினைகளான எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, எதிர்காலத்திலோ, துன்பம் விளைவிக்காத முறையில் செயலாற்றி  வாழ வேண்டியுள்ளது.  இல்லையேல் ஒருவர் பிறருக்குத் தீிமை செய்வதாகிய குற்றம் திரும்பத் திரும்ப பிரதிபலித்து எல்லாருமே துன்பப்பட நேரிடும்.  நேரிடும் என்பதில்லை! நேரிட்டுக் கொண்டுதான் உள்ளது சமுதாயத்தில் என்பதுதான் நிதர்சனமான உண்மைஇதற்கு என்ன தீர்வு?

கல்வி பற்றி திருவள்ளுவர்:

தீர்வை அறிவதற்கு முன்னர் பொய்யா மொழிப்புலவர் கல்வி பற்றி என்ன கூறுகிறார் என்று கவனிப்போம்.

ஐயன் திருவள்ளுவர் கல்வி பற்றி கல்வி என்கின்ற அதிகாரத்தில் முதல் குறளில் கூறுவதனைக் கவனிப்போம்.

“ கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக“               குறள் எண் 391.

இதற்கு சாதாரணமாக பொருள் கூறுவது ‘கற்க வேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்  அங்கனம் கற்றதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.’  அதாவது ‘கசடற’ என்பதற்கு ஒருவன் கற்றதற்குரிய நூல்களை ஐயம், திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்க வேண்டும் என்கின்ற அளவிலேதான் பொருள் கொள்ளப்படுகின்றது..  கற்றதில் ஐயம் இருக்கக் கூடாது என்பது சரிதான்.  ஆனால்கசடுஎன்று ஐயன் திருவள்ளுவர் கூறுவது  ‘பரிணாமக்கசடு’(Evolutionary Effluent) ஆகும்.

பரிணாமக்கசடு என்றால் என்ன?

தன்மாற்றத்தில்(பரிணாமம்) பிறர் வளம் பறித்தல் பண்புடைய விலங்கினத்திலிருந்துதான் ஆதிமனிதன்  கருத்தொடராக வந்தான்.  அவனுடைய கருத்தொடரில் தான் இன்றைய சமுதாயமும் வாழ்ந்து வருகின்றது.  கருத்தொடராக என்கின்றபோது  ஆதிமனிதனுக்கும் இன்றைய மனித சமுதாயத்திற்கும் எங்கேயும் தொடர்பு விட்டுப்போகவில்லை. ஆகவே ‘பிறர்வளம் பறிக்கும் கருமையப்பண்பும்’ கருத்தொடராக பல்வேறு பிறவிகள் எடுத்து வந்துள்ள தற்போதைய மனிதனின் கருமையத்திலும் ஆழமாகப் (intense imprint)பதிந்துள்ளது. அந்த பிறர்வளம் பறித்துண்ணல் பண்பையே கசடு என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.  இந்த கசடு நீங்குவதற்கான கல்வியினைக் கற்க வேண்டும்.  கற்ற பின் அவ்வாறு கற்ற பின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக(பழக) வேண்டும்.  என்கிறார் ஐயன் திருவள்ளுவர். பரிணாமக்கசடு நீக்காத கல்வியால் மனித சமுதாயம் நிரந்தர ஒழுக்கவாழ்க்கை வாழ்வது அரிது.

தீர்வு ஒழுக்கப்பழக்க அறிவு தரும் கல்வி:

மனித இனம் ஒருவரோடு ஒருவர் ஒத்தும் ஒருவருக்கொருவர் உதவியும் வாழ வேண்டிய வாழ்க்கைப் பண்பாட்டை உணர்ந்தும் பழகியும் நல்லுருவங்களாக வாழ வேண்டியது இன்றியமையாததாக உள்ளதால் மகரிஷி அவர்கள் மனிதன் தன் இளமைக்காலத்திலேயே  பண்பாட்டை கற்று பழகி தனது அறிவாட்சித்தரத்தை உயர்ந்த நிலையில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.  ‘இளமையில் கல்’, ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’,  ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்தபனையெல்லாம்  கருத்தில் கொண்டு   ஒவ்வொரு மனிதனும் தனது ஏழு வயது முதலாக இருபது வயது வரையிலான இளமைக் காலத்தில் இறைநிலையுணர்ந்து ஆன்மீக அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டிய காலமாக இருக்கின்றது எனக் கூறுகிறார் திருவள்ளுவர் வழிவந்த மகரிஷி அவர்கள்.

வேதாத்திரிய கல்விமுறை:

எனவே,  ‘Education is the manifestation of Perfection already present in man’ என சுவாமி விவேகானந்தர் கூறியதை, வழிமொழிந்து கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தரின் இளவலான மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.

பசுவிற்கு நான்கு கால்கள் உள்ளதுபோல், கல்வி நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறர் மகரிஷி அவர்கள்.

1) எழுத்தறிவு

2) தொழிலறிவு

3) இயற்கைத்தத்துவ அறிவு

4) ஒழுக்கப்பழக்க அறிவு.

எவ்வாறு  பசுவிற்கு நான்கு கால்களில் ஒருகாலில் ஊனம் இருந்தாலும் அது அதற்கு துன்பமாக அமைவதுபோல், கல்வியின் நான்கு உறுப்புகளில் ஒன்று குறைந்தாலும் அந்த அளவில் மனிதன் குறைபாடு உடையவனே என்று எச்சறிக்கிறார் மகரிஷி அவர்கள்.

ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், அதாவது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால், அங்கிருந்து பள்ளிப்படிப்பு முடியும் 12 ம் வகுப்பு வரை ஒழுக்கவியல் என்கின்ற  என்கின்ற கட்டாயப் பாடத்தை ஏற்படுத்த வேண்டியது கல்வியாளர்களின் கடமையாக உள்ளது.  தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து கட்டாயப் பாடங்கள் இருப்பதுபோன்று, ஒழுக்கத்திற்கென கட்டாயப்பாடத்தை ஏற்படுத்த வேண்டும். ஒழுக்கத்தைக் கற்று அதனைப்பற்றித் தெரிந்து கொள்வதோடு இருந்துவிடாமல்  அதனைப் பழகுகின்ற கல்வியாக ஒழுக்கக்கல்வியினை  அமைக்க வேண்டும்.

நான்காவது இன்றியமையாத் தேவை?

எனவே ஒழுக்கக்கல்விக்கென தனியாக இயல் ஏற்படுத்தி அதனை ஆரம்ப பள்ளிக்கல்வியிலிருந்தே கட்டாயப் பாடமாக்கி இறுதி பள்ளிப்புப்படிப்பு முடியும் வரைக் கற்றுத்தர வேண்டும்.  இதுவரை இருந்து வருகின்ற  மனிதனின் மூன்று இன்றியமையாத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை. உறைவதற்கு உறைவிடம் என்பதோடு நான்காவது இன்றியமையாத் தேவையான ஒழுக்கப்பழக்க அறிவு வளர்க்கும் கல்வியினை சேர்த்துக் கொள்ள வேண்டியது  கல்வியாளர்களின் கடமை

ஒழுக்கத்திற்கென்று தனி இயலா!

                                 திகைப்பே வேண்டாம் அன்பர்களே !!!

வளர்ந்து வரும் அறிவியலில் இன்று எத்தனையே துறைகள் அறிஞர்களால் புதிது புதிதாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு துறைகள் பெருகிவரும்போது அததற்கென தனித்தனியே இயல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.  சிவாயநமஎனும் ஐந்தெழுத்து மந்திரம் போன்றுஒழுக்கம்என்பதும் ஐந்தெழுத்து மந்திரம். எனவே  ஒழுக்கம் கற்பிக்க  ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை

1) ஒழுக்கவியல் — 1,

2) ஒழுக்கவியல் — 2

3) ஒழுக்கவியல் – 3

4), ஒழுக்கவியல் – 4

5) ஒழுக்கவியல் – 5

6) ஒழுக்கவியல் – 6

7)  ஒழுக்கவியல் –7

8) ஒழுக்கவியல் – 8

9) ஒழுக்கவியல் –  9

10) ஒழுக்கவியல் –10

11) ஒழுக்கவியல் –11

12) ஒழுக்கவியல் –12

என பன்னிரண்டு பாடங்களாக (subjects) ஏற்படுத்த முடியும்,  அந்த அளவிற்கு  ஒழுக்கம் கற்பிப்பதில் material contents உள்ன அறிவியல் சார்ந்த உண்மைகள், தகவல்கள். அவற்றினை கருத்தியலாகவும் மற்றும் பழகுவதற்கு செய்முறைப் பாடங்களாகவும் ஏற்படுத்த முடியும்?  தற்போது ஒரு வாரத்தில் உள்ள periods கூட்டாமல் அப்படியே வைத்துக்கொண்டு இரண்டு periods ஒழுக்கவியல் கட்டாயப்பாடத்திற்கு ஒதுக்கினாலே போதும். ஒன்று கருத்தியல் வகுப்பாகவும், மற்றொன்று செய்முறை வகுப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

மாணவனின் வயது, அவன் படிக்கும் வகுப்புவகுப்பில் கற்பிக்கப்படும் மற்ற பாடங்களினால் மாணவனுக்கு ஏற்படும் அறிவின் உயர்விற்கு ஏற்ப ஒழுக்கவியல் பாடங்களை ஏற்படுத்தமுடியும். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் மாணவன் தனது பதினேழாவது வயதில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வரும்போது ஒழுக்கச் சீலனாக வரமுடியம். வருவான். ஏனெனில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒழுக்கவியலைப் படிக்கிறான்அவன் ஒழுக்கவியல் ஸ்மரணையிலேதான்(நினைவிலே) இருப்பான்ஒழுக்கவியல் கற்பதில் ஆர்வம் மிகுந்து வரும்ஒழுக்க ஏணியில் கடைசிபடியான அறிவின்முழுமைப்பேறு படியினை அடைவான்.

முப்பது வருடங்களில் தெளிவு பெற்ற மனவளக்கலைஞருக்கு எவையெல்லாம் தெளிவு பெற அறிவுறுத்தியதோ அத்துனையும் இந்த பன்னிரண்டு பாடங்களில் சேர்த்துவிடமுடியும்.  அதாவது வேதாத்திரி மகரிஷி அவர்கள் வேதாத்திரியம் மலர்ந்திட  என்னென்ன எண்ணிராரோ, சிந்தித்தாரோ, உரையாடினாரோ, எழுதினாரோ அத்துனையும்  (Vocabulary of Vethathriam Language) அறிவுரைகளையும் பன்னிரண்டு பாடங்களில் சேர்த்துவிட முடியும்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதோ அதுபோன்று இளமைப்பருவத்தை தவறவிட்டபிறகு  ஒழுக்கவியலைக் கற்றுக் கொள்வதற்கு மிகுந்த சிரமம் இருக்கும்.
ஏனெனில் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைாயது. அது முதியோர் கல்விக்கு ஒப்பாகிவிடும்.

இது கல்வியாளர்களின் கடமை மட்டுமே அல்ல.  சமுதாயமும் அதாவது, சமுதாயம் உய்வதற்கு வழியே இல்லையா என ஏங்கி, செய்வதறியாது தவிக்கும் சமுதயா நலனில் அக்கறை கொண்டுள்ள ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள், மனவளக்கலைஞர்கள் அனைவருக்கும் இக்கடமையில்  பெரும் மானசீக பங்கு (silent participation by noble thoughts in this endeavour) உண்டு.

எனவே ஒழுக்கவியல் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஒழுக்கவியல் கல்வி மலர்வதற்கு ஒழுக்கவியல் கல்வியினை வாழ்த்தி, வாழ்த்தி புனித எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரவ விட்டு  வருவோம்.

வாழ்க ஒழுக்கவியல் கல்வி! வளர்க ஒழுக்கவியல் கல்வி!!

வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

வாழ்க அறிவுச் செல்வம்!  வளர்க அறிவுச் செல்வம்!!

       வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்